“சமநிலைச் சமுதாயம்” நவம்பர் 2013 இதழில் வெளிவந்த சிறப்புக் கட்டுரை
உலகம் இன்னொரு ஆங்கில புத்தாண்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே வந்து விட்டது, ஹிஜ்ரி-இஸ்லாமியப் புத்தாண்டு.இறைத்தூதர் நபிகள் நாயகம் {ஸல்}அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குப் புலம்பெயர்ந்து சென்ற நிகழ்வுக்கு “ஹிஜ்ரத்”என்று பெயர்.அதன் வரலாற்றுப் பிண்ணனி குறித்த சில தகவல்களை இங்கே பார்ப்போம்.
நபிகள் நாயகம் {ஸல்} அவர்கள் மதீனாவுக்கு வந்ததும் {நிகழ்வுகளுக்கு} தேதி குறிக்கும்படி உத்தரவிட்டார்கள்.நபியவர்கள் ரபீவுல் அவ்வல் மாதத்தில் மதீனா வந்தார்கள்.மக்கள் நபியின் மதீனா வருகையிலிருந்து தேதி குறித்தனர். முதன் முதலாக பதிவுகளில் தேதி குறித்தவர் :யமனில் இருந்த யஃலா பின் உமையாவாகும். 1
இஸ்லாத்தில் முதன் முதலாக {தபால் மற்றும் அரசு சார்ந்த,சாராத பதிவுகளுக்கு} தேதி குறிக்க உத்தரவிட்டவர் கலீஃபா உமர் {ரலி} அவர்கள் எனக்கூறப்படுகிறது.2 பிரபலமான இந்த கூற்றுப்படி நபிகள் நாயகம் {ஸல்} அவர்கள் மறைந்து ஆறு வருடம் கழித்து ஹள்ரத் உமர் ரலி அவர்களின் ஆட்சி காலத்தில் {கி.பி.639}இஸ்லாமிய ஆண்டை ஆரம்பிக்க வேண்டிய அவசியம் உணரப்பட்டது.
நிறைவான இஸ்லாமிய சகாப்தம் மலருவதற்கு முன்பு அரபிகள் தங்களது ஆண்டுகளை தங்கள் பொது வாழ்வில் நிகழ்ந்த முக்கிய நிகழ்ச்சிகளிலிருந்து கணக்கிட்டு வந்தார்கள்.அனுமதி ஆண்டு,நில அசைவு ஆண்டு,யானை ஆண்டு என பல ஆண்டுகளை நடைமுறையில் வைத்திருந்தனர்.பின்னர் இரண்டாம் கலீஃபா உமர் {ரலி} அவர்கள் குறிப்பு ஒன்றைத் தயாரித்து,அதில் “ஷஃபான்” மாதம் என்று குறிப்பிட்டார்கள். இதனைப் பின்னர், தான் பார்க்கும்போது எந்த ஆண்டின் ஷஃபான் மாதம் என்று விளங்குவது?என தனக்குத்தானே கேள்வி கேட்டுக் கொண்டார்கள்.
இந்த நிலையில் கலீஃபாவிடமிருந்து தங்களுக்கு தேதி குறிப்பிடாமல் கடிதங்கள் வருகிறது என மாநில ஆளுநர்களிடமிருந்து முறையீடுகள் வந்தன.குறிப்பாக அபூமூஸல் அஷ்அரீ {ரலி} அவர்கள், “தேதி குறிப்பிடாத தாங்களின் கடிதம் கிடைத்தது”என நறுக்கென்று எழுதினார்கள்.இதனைத் தொடர்ந்து கலீஃபா அவர்களின் அவையில் ஆலோசனை நடைபெற்றது. இஸ்லாமிய ஆண்டை ஆரம்பிப்பது என முடிவானது.
அப்போது எதனை அடிப்படையாக வைப்பது என்பதில் பல்வேறு கருத்துக்கள் ஆராயப்பட்டன.நபி {ஸல்}பிறந்தது,நபித்துவம் கிடைத்தது முதலிய பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் பரிசீலிக்கப்பட்டு, இறுதியாக, நபியவர்கள் திருமக்காவிலிருந்து திருமதீனாவுக்கு புலம் பெயர்ந்து வந்த வரலாற்று சிறப்பு மிக்க ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிய ஆண்டை ஆரம்பிப்பது என ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஏனெனில், நபித்துவம் பிறப்பின் மூலம் தொடங்கினாலும் அது துலங்கியது ஹிஜ்ரத்தின் மூலமேயாகும்.நபித்துவம் தொடங்கியது மக்காவில்,ஆனால் அது தொடர்ந்தது மதீனாவில்.இறைத்தூது வெளிப்பட்டது மக்காவில்,ஆனால் அது வெளிச்சத்திற்கு வந்ததும்,வளர்ச்சி பெற்றதும் மதீனாவில்தான்.
இந்த வகையில் இஸ்லாம் புத்துணர்ச்சியோடு புதுப்பொலிவு பெற்று உலகமெல்லாம் பரவியதற்கு காரணம் ஹிஜ்ரத்.
ஏகத்துவம் இந்த ஜெகமெங்கும் ஜொலிக்கக் காரணமான ஹிஜ்ரத் நபி {ஸல்}அவர்களின் சரித்திரத்தில் திருப்புமுனையாக அமைந்த அழகான அற்புதமான ஒரு நிகழ்வு.
இஸ்லாத்தின் குரல் தரணியில் எங்கும் ஒலிக்கவிடாமல் ஒடுக்கப்பட்ட போது,அது அகிலமெங்கும் ஜெட் வேகத்தில் பறந்து சென்று பரப்ப இறக்கை கட்டிக் கொடுத்தது,ஹிஜ்ரத்தாகும்.
ஹிஜ்ரத்துக்கு முன்னர் சொற்பமாக இருந்த முஸ்லிம்கள், ஹிஜ்ரத்துக்குப் பிறகு பல்கிப்பெருகினர்.ஹி.மு.வில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்த முஸ்லிம்கள் ஹிஜ்ரி 6-ல் நபி {ஸல்}அவர்களோடு உம்ராவுக்கு வந்தவர்கள் 1400 பேராகவும்,ஹிஜ்ரி 8-ல் மக்கா வெற்றிக்கு வந்தவர்கள் 12,000 பேராகவும்,ஹிஜ்ரி 10-ல் நபியோடு இறுதி ஹஜ் செய்த முஸ்லிம்கள் 1,24,000 மாகவும் உயர்ந்தார்கள்.அந்த உயர்ச்சியின் தொடர்ச்சி இன்று வரையிலும் தொடர்கிறது.
இந்த நபித்தோழர்கள் மூலம் உலகமெங்கும் இஸ்லாம் பரவி, {2012-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி} இன்று உலக மக்கள் தொகையில் {210கோடி} முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்றால் இவ்வளவு பெரிய வெற்றிக்கு வித்திட்டது ஹிஜ்ரத் அல்லவா! அதனால்தான் இன்று உலகில் நடைமுறையில் உள்ள பல்வேறு “வருடப்பிறப்பு” நிகழ்வுகளில் ஹிஜ்ரத்தைப்போல அழுத்தமான தாக்கத்தை தரக்கூடியது எதுவுமில்லை என வரலாற்று ஆய்வாளர்கள் வியக்கின்றனர்.
இந்த வகையில் ஹிஜ்ரத்,தஃவா-அழைப்புப் பணிக்கு கதவு திறந்து விட்டது.இஸ்லாம் ஹிஜ்ரத்திற்குப்பிறகு ஊர் சுற்றி,உலகம் பரப்பி,மீண்டும் அது புறப்பட்ட ஸ்தலத்திற்கு – உலகின் மைய கேந்திரமான மக்காவுக்கு வெற்றியோடு திரும்பி வந்து விட்டது.
ஆனால் இந்தியாவிலிருந்து சீனா,ஜப்பான் முதலிய நாடுகளுக்கு ஹிஜ்ரத்தான் பௌத்தம்,தனது தாயகத்தில் வெற்றி பெறவோ,பெரிய சமூக மாற்றங்களுக்கு வித்திடவோ,புதிய அரசியல் நிகழ்வுகளுக்குக் காரணியாகவோ இல்லை என்பதே நிதர்சன உண்மை.
பாலஸ்தீனத்தில் பிறந்த ஈஸா நபியின் இஸ்லாம், இன்றும் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறது.எனினும் பௌல் புதிதாக உண்டாக்கி பரப்பிய இப்போதைய கிறிஸ்தவம் ஐரோப்பாவுக்கும், அமெரிக்காவுக்கும் ஹிஜ்ரத்தானது.எனினும்,ஏசு கிறிஸ்து பிறந்த மண்ணில் அது வெற்றி பெறவில்லை.
ஆனால் மக்காவிலிருந்து ஹிஜ்ரத்தான இஸ்லாம், எட்டு வருடத்திற்குள் மீண்டும் மக்கா திரும்பி,இன்று வரை அங்கு அதிகாரத்தில் இருக்கிறது. இனி என்றும் இன்ஷா அல்லாஹ் யுக முடிவு நாள் வரை அங்கு ஆட்சி செய்யும். ஏனெனில் தஜ்ஜால் எனும் உலகப் பேரழிவாளன் மக்கா,மதீனாவுக்குள் நுழைய முடியாது.
இறைத்தூதர்களான நபிமார்களுக்கு எதிராக எதிரிகளின் அடக்குமுறை கட்டுக்குள் அடங்காமல் எல்லை மீறியபோது அல்லாஹ் இரண்டு விதத்தில் உதவி செய்து தனது தீர்க்க தரிசிகளைப் பாதுகாத்தான். 1} எதிரிகளை அழிப்பது. 2} நபியை ஹிஜ்ரத் செய்ய வைப்பது.முதல் வகை இறை உதவி ; ஹூத் நபி,ஸாலிஹ் நபி,லூத் நபி {அலை} க்குக் கிடைத்தது.அவர்களை ஏற்க மறுத்து கொடுமைகள் செய்த அவர்களின் கூட்டத்தினரை அல்லாஹ் அழித்தொழித்தான்.
இரண்டாவது வகையில் உதவி செய்யப்பட்ட,நபி இப்ராஹீம் {அலை} அவர்கள்; இராக்கிலிருந்து சிரியாவுக்கும், மூஸா நபி{அலை} அவர்கள் ; எகிப்திலிருந்து சிரியாவுக்கும்,மாண்பான முஹம்மது நபி {ஸல்} அவர்கள் ; மக்காவிலிருந்து மதீனாவுக்கும் “ஹிஜ்ரத்” செய்து புலம் பெயர்ந்தார்கள்.
பரிசுத்த ஆவியால் ஊதப்பட்டுப்பிறந்த ஈஸா நபி {அலை}அவர்கள் மண்ணிலிருந்து விண்ணிற்கும்,பரிசுத்த மண்ணிலிருந்து படைக்கப்பட்ட ஆதம் நபி அலை அவர்கள் விண்ணிலிருந்து மண்ணிற்கும் ஹிஜ்ரத் செய்தார்கள்.
இதன்படி பார்த்தால், ஹிஜ்ரத் {அகதியாகுதல்} என்பது அவமானம் அல்ல; தன்மானத்தோடு வாழ்வதற்கான ஒரு அறிய வாய்ப்பு.அது அவ மரியாதை அல்ல; சுய மரியாதை கிடைப்பதற்கான புதிய சூழலை ஏற்படுத்துவதாகும்.
மா நபி {ஸல்}அவர்கள் வெற்றி வீரராக மக்கத்து மண்ணை வாகை சூடியபோது {மக்கா} வெற்றிக்குப்பிறகு இனி ஹிஜ்ரத் தேவையில்லை’ என்று அறிவிப்பு செய்தார்கள்.அப்படியென்றால் என்ன அர்த்தம்?வெற்றிக்கு முன் ஹிஜ்ரத் அவசியம் என்பது தானே ஹிஜ்ரத் என்பது அச்சமுள்ள குஃப்ர் {இறைமறுப்பு} ஸ்தானத்தை விட்டு புலம்பெயர்ந்து அச்சமற்ற,அரவணைப்பும்,ஆதரவும் நிறைந்த தளத்திற்கு சென்று விடுவதற்குப் பெயர்.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் நபித்துவத்தின் 13-ம் ஆண்டு ரபீவுல் அவ்வல் மாதம் முதல் தேதி வியாழக்கிழமை மக்காவிலிருந்து ஹிஜ்ரத் புறப்பட்டார்கள்.ரபீவுல் அவ்வல் 12-ம் நாள் {28ஜூன் கி.பி.622} திங்கள்கிழமை லுஹர் நேரம் தங்களது 53-வது வயதில் மதீனா நகர் வந்து சேர்ந்தார்கள்.
ஸவ்ர் குகையிலிருந்து பெருமானார் {ஸல்} அவர்கள் புறப்பட்டதிலிருந்து 69 நாட்கள் முன்பிருந்த முஹர்ரம் மாதம் முதல் நாளே ஹிஜ்ரி ஆண்டின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டது.காரணம், ஹஜ் முடிந்து வாணிபம் தொடங்கப்பெறும் மாதமாக முஹர்ரம் மாதம் இருந்தது.
இதல்லாம், முஹர்ரம் பல்வேறு சிறப்புகளைப் பெற்றுத் திகழ்கிறது. 1, ஷஹ்ருல்லா - அல்லாஹ்வுடைய மாதம். 2, ரமலானுக்குப்பிறகு நோன்பு பிடிக்க சிறந்த மாதம். 3 3, முஹர்ரமில் ஒரு நாள் நோன்பு பிடித்தால் ஒரு நாளுக்கு முப்பது நாள் நன்மை உண்டு. 4 4, முஹர்ரமில் இறைவன் ஒரு சமூகத்தாருக்கு தௌபா {மன்னிப்பு} வழங்கினான். மற்ற சமூகத்தாருக்கும் {கேட்டால் } இதில் தௌபா வழங்கிவிடுகிறான். 5 5, இதில் தான் கஃபாவின் திரைத்துணி மாற்றி புதியது அணிவிக்கப்படும் .6
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு புலம் பெயரும் போது கஃபாவை நோக்கி கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்ததில், “யா அல்லாஹ்…! உனக்கு நன்றாகத் தெரியும் இவர்கள் என்னை எனக்குப் பிரியமான ஊரிலிருந்து வெளியேற்றி விட்டார்கள் ஆகவே நீ உனக்கு பிரியமான ஊரில் என்னை குடியேற்றுவாயாக” என்று கூறினார்கள். அல்லாஹ் இதை ஏற்று மதீனாவில் அவர்களை தங்கவைத்தான்.
அப்படியானால் இதில் மூன்று தத்துவங்கள் உள்ளன.
ஓன்று: மதீனா அல்லாஹ்வுக்கு பிரியமான ஊர். மக்கா அவனது தூதர் பெருமானார் ஸல் அவர்களுக்கு பிரியமான ஊர்.
இரண்டாவது: அல்லாஹ்வுடைய விருப்பத்திற்காக நம்முடைய விருப்பத்தை ஹிஜ்ரத் செய்து விட்டு விட வேண்டும்.
மூன்றாவது: அல்லாஹ்வுக்காக நம்முடைய விருப்பத்தை ஹிஜ்ரத் செய்து துறந்தால், அல்லாஹ் அவனுக்கு விருப்பமானதை நமக்கு வழங்குவான்.
மக்கா, உலகின் முதல் நகரம். ஆதி இல்லம் அமைந்த புராதன புண்ணிய பூமி. இதை விட்டு விட்டு ஹிஜ்ரத் செய்யும்படி உத்தரவு வந்த தென்றால். புண்ணியம் என்பது வெறும் புலம் சார்ந்த விஷயம் அல்ல. அது அறம் சார்ந்த விஷயம். புனித தலங்களை பற்றிக் கொண்டிருப்பதில் மட்டும் புண்ணியம் இல்லை. பூமான் நபியின் அடிச்சுவட்டைப் பற்றிப்பிடிப்பதில் தான் புண்ணியம் இருக்கிறது.
பெருமானார் (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு ஹிஜ்ரத் செய்து சென்ற பிறகு, அவர்களைப் பின் தொடர்ந்து ஹிஜ்ரத் செய்யாமல் மக்காவில் தங்கிவிட்ட முஸ்லிம்கள் குறித்து. “அவர்கள் ஓதுங்குமிடம் நரகம் தான்.அது ஓதுங்கும் இடங்களில் மிக கெட்டது” என்று அல்குர்ஆன் 7 எச்சரிக்கை செய்கிறது.அல்லாஹ்வுடைய பூமி விசாலமானதல்லவா. நீங்கள் இருந்த அவ்விடத்தை (மக்காவை) விட்டு ஹிஜ்ரத் செய்து வெளியேறி இருக்க வேண்டாமா..!என்று தொடர்ந்து அல்லாஹ் கேட்பான்.
இவ்வசனத்தில் இடம் பெற்றுள்ள “அல்லாஹ்வுடைய பூமி” என்பது மதினா நகரைக் குறிக்கும் என்று ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி). அவர்கள் விளக்கமளிப்பார்கள். இதன்படி இறையில்லமாம் கஃபா அமைந்த மக்காவை, “அல்லாஹ்வுடைய பூமி” என்று சொல்லாமல், மாநபி (ஸல்) அவர்கள் குடியேறி இருக்கும் திருமதினாவை “அல்லாஹ்வுடைய பூமி” என்று அல்லாஹ் கூறியிருப்பது, சிந்தித்துணரதக்கதாகும்.
நபியின் காலத்தில் ஹிஜ்ரத் செய்வது பர்ளு. {கட்டாய கடமை} நபி இல்லாத மக்காவில் இருப்பது ஹராம். இருந்தால் நரகம் தான் சேருமிடம். .” என்னும் இறை வசனம் நபி இல்லாத மக்காவை அல்லாஹ்வால் சகிக்க முடியவில்லை:ஜீரணிக்க முடியவில்லை. என்பதன் வெளிப்பாடேயாகும்.
நபியே....! இந்நகரத்தின் மீது சத்தியம் செய்கிறேன். என்று மக்கமா நகரை மேன்மைப்படுத்தி குறிப்பிடுமிடத்தில், அதற்கடுத்த வசனத்தில் அதற்கொரு நிபந்தனையிட்டு “நீங்கள் இந்நகரத்தில் (மக்காவில்) தங்கக்கூடிய சமயத்தில், இந்நகரத்தின் மீது சத்தியம் செய்கிறேன்” 8 எனக்கூறுகிறான் அப்படியென்றால் நீங்கள் இல்லாத மக்கமா நகரைக்கொண்டு சத்தியம் செய்யமாட்டேன். என்பது இதன் பொருள்.
நபி இல்லாத மக்காவுக்கு அல்லாஹ்விடத்தில் விலை இல்லை என்பது தெரிகிறதல்லவா “நபி இல்லாத மக்காவில் இருப்பது ஹராம். இருந்தால் நரகம் தான் சேருமிடம்.எனவே எங்கே இருக்கிறோம் என்பதல்ல. எப்படி இருக்கிறோம். என்பதே முக்கியம். எந்த இடமும் யாரையும் காப்பாற்றாது. தன்னைத் தானே ஓருவன் தற்காத்துக் கொள்ளாத வரை யாரும் எதுவும் செய்து விட முடியாது.
ஆகவே நான் நல்ல ஊரில், நல்ல இடத்தில் இருக்கிறேன். எனக்கூறுவதில், அதைமட்டும் நினைத்துப் பெருமைப்படுவதில் அர்த்தம் இல்லை. நல்ல காரியங்கள்,சமூக சேவைகள் செய்வதில் தான் சந்தோஷமடைய வேண்டும். பிரதேசப் பெருமைகளை பேசி ஏமாந்து போக வேண்டாம்.
இது பற்றி இறை ஞானி ஹாதமுல் அஸம்மு (ரஹ்) அவர்கள் கூறுகையில்,சொர்க்கத்தை விட சிறந்த இடம்,உயர்ந்த இடம் வேறு எதுவும் இல்லை. இருக்கவும் முடியாது. ஆனால் அங்கே வைத்து தான் ஆதம் நபி (அலை) அவர்கள் ஆகாத ஓரு காரியம் செய்தார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பெல்லாம் அங்கே இருக்கும் போது தான் ஏற்பட்டது. (ஆனால் சொர்க்கம் அவர்களை காப்பாற்றவில்லை). அதிக இபாதத் (இறைவணக்கம்) கண்டு இறுமாந்து விடாதே... ஷைத்தானை விட இவ்வுலகில் இறைவனை அதிகம் வணங்கியது வேறு யாருமில்லை. ஆனால் அவன் அங்கிருந்து தான் அதுவும் இறைவனுக்கு முன்பிருந்து தான் ஆணவம் பேசி, தூக்கி எறியப்பட்டான்.
அதிக ஞானமிருக்கிறது என்று ஏமாந்து விடாதே.. “பல்அம் இப்னு பாவூரா” என்ற யூதப்பேறிஞர், அந்த காலத்தில் ஆன்மீக அறிவில், எல்லோரையும் விஞ்சி நின்றும், பணத்திற்காக எல்லா படித்தரங்களையும், இழந்து கடைக் கோடி நிலைக்குத் தள்ளப்பட்டார். அதிகமான நல்லோர்களை, நாதாக்களைப் பார்த்திருக்கிறேன்.என்று பெருமை பேசி ஏமாந்து விடாதே... உம்மி நபி நாதர் முத்து முஹம்மது முஸ்தபா நபி (ஸல் )அவர்களை விட மேலான புருஷர் இத்தரணியில் வேறு யாரும் இல்லை. ஆனால் அவர்களை வெறும் பார்வை பார்த்த, அவர்களுடைய உறவினர்களும், விரோதிகளும் எந்த பயனையும் அடையவில்லை என்று குறிப்பிடுவார்கள்.
எனவே, புண்ணிய பூமியில் இருப்பதில் மட்டும் பெருமையில்லை. தனக்கும், பிறருக்கும் பயனுள்ள விதத்தில் வாழ்வதில் மட்டுமே சிறப்பு இருக்கிறது. நபித் தோழர் அபூதர்தா (ரலி) அவர்கள் தனது உற்ற தோழர் சல்மான் பார்ஸி (ரலி) அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் , “உங்களுக்குப் பிறகு இப்போது என்னை அல்லாஹ் பைத்துல் முகத்தஸ் இருக்கும் புண்ணிய பூமியில் வாழ வைத்து, நிறைய பொருள் செல்வத்தையும், அதிகமான குழந்தைச் செல்வத்தையும் வழங்கியிருக்கிறான். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” என எழுதியிருந்தார்கள். இதற்கு பதில் எழுதிய சல்மான் பார்ஸி (ரலி) அவர்கள், “புண்ணிய பூமி யாரையும் புனிதமாக்காது. புனிதஸ்தலம், யாருக்காகவும் வேலை (அமல்) செய்யாது. உங்களுக்காக நீங்கள் தான் வேலை (அமல்) செய்தாக வேண்டும். பலனுள்ள கல்வியை பெறுவதைக்கொண்டும் இறை நம்பிக்கை, மற்றும் சகிப்புத்தன்மை மூலம் மட்டுமே உங்களை புனிதப்படுத்த முடியும். இறைவனைக் காண்பது போல அமல் (வணக்கம்) செய்யுங்கள். உங்களை நீங்கள் மரணித்தவர்களில் (இறைவன் முன்பு சரணடைந்தவர்களில்) ஓருவராக கருதிக்கொள்ளுங்கள். சிறப்பு என்பது பிள்ளைகளைப் பெறுவதிலும், செல்வத்தை ஈட்டுவதிலும் இல்லை. உபயோகமான கல்வி, உயர்ந்த குணங்களில் தான் பெருமை இருக்கிறது” என்று குறிப்பிட்டார்கள்.
ஹிஜ்ரத் - புலம் பெயருதல் சொல்லும் பெரிய பாடம் என்னவென்றால், இவ்வுலகம் இருப்பு ஸ்தானமல்ல ; அது ஓரு இறப்பு ஸ்தானமாகும் என்பது தான். புலம் பெயரும் நகர்வு தொடங்கியது இன்று நேற்றல்ல;ஆலமே அர்வாஹ் -ஆன்ம உலகில் ஆரம்பித்த மானுடப்பயணம், தொடர்ந்து கருவூர், பொய்யூரில் மையம் கொண்டு, பல நிலைகளை கடந்து, இங்கு கரை கடக்க கூடியதாகும். ஆகவே தான் பேரறிஞர் இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்கள் “தொடக்கமுள்ள மனிதனுக்கு முடிவும் தொய்வும் இல்லை தொடர்தானுண்டு.” எனக் கூறுவார்கள்.
“நீ இந்த உலகில் (தொடர்ந்து நகர்ந்து ஹிஜ்ரத் செய்து கொண்டே இருக்கும்) ஓரு பரதேசியைப் போல இரு” என்று பெருமானார் ஸல் அவர்களும் கூறுவார்கள். “இந்த உலகம் ஓரு பாலத்தைப் போல கடப்பதற்கு தான் கட்டப்பட்டுள்ளது. வசிப்பதற்கு அல்ல” என்று ஈஸா நபியும் சொல்லியுள்ளார்கள். வெற்றியின் ரகசியமே ஹிஜ்ரத் தான். ஹிஜ்ரத் என்றால் விட்டு விடுவது ; பொருளை, பற்றை , பாசத்தை, இப்படி இறைவனுக்கெதிரான எல்லாவற்றை விட்டும் ஹிஜ்ரத் செய்ய வேண்டும். ஆகாததை மட்டுமல்ல ; ஆகுமானதைக்கூட, அதனால் நன்மைப் பயக்கும் என்றால் அல்லாஹ்வுக்காக அதைப்புறக்கணிப்பதும் ஹிஜ்ரத் தான்.
வரலாற்றில் மகத்தான வெற்றி பெற்றவர்களெல்லாம், தங்களது லட்சியத்தை எட்டுவதற்கும், இலக்கை அடைவதற்கும், தங்களுக்கு விருப்பமானதை விட்டும் ஹிஜ்ரத் செய்திருக்கிறார்கள்.
அமெரிக்காவில் நடந்த நிகழ்வு இது.நிற வெறியும்,இன வெறியும் கொடிகட்டிப் பறந்த காலம்.கருப்பு இனத்துப் பெண்மணியான மாவேலா, பேருந்து ஓன்றில் வெள்ளையர்கள் அமர்ந்து பயணம் செய்யும் இருக்கையில் உக்கார்ந்து விட்டாள் என்பதற்காக அதிலிருந்து இறக்கிவிடப்பட்டாள். இதைக் கண்டித்து, கருப்பர் எல்லோரும் ஓன்று சேர்ந்து போராடினார்கள். பேருந்தைப் புறக்கணித்து,இனிமேல் பேருந்தில் பயணிப்பதில்லை என்று “பேருந்து ஏறா போராட்டம்” நடத்தினார்கள்.இதுவும் ஹிஜ்ரத் தான். பேருந்தெல்லாம் காலியாக ஓடியது. வெள்ளைக்கார பஸ் அதிபர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்ப்பட்டதால் கருப்பர்களுக்கு அடி பணிந்தனர். அவர்களுக்கு பேருந்தில் இருப்பு ஸ்தானம் வழங்க முன் வந்தார்கள்.
பெப்சி, கோக் விற்பனையால் கிடைக்கும் லாபத்தில் பெரும் பங்கு இஸ்ரேலுக்குச் சென்று, பாலஸ்தீன முஸ்லிம்களை கொன்று குவிக்க, அதை பயன்படுத்துகிறார்கள். ஆகவே அந்த பானங்களை (ஹிஜ்ரத்) விட்டு விடுங்கள் என்று மார்க்க மேதை யூசுப் கர்ளாவி போன்றவர்கள் தீர்ப்பு கூறினார்கள். கறுப்பர்களின் பஸ் ஏறாப் போராட்டத்தால் வெள்ளையர்களுக்கு புத்தி வந்ததைப் போல, முஸ்லிம்களின் பெப்சி கோக் ஹிஜ்ரத்தால் யூதர்களுக்கு புத்தி வந்திருக்கும். ஆனால் அந்தக் கருப்பு இனத்தவர்களுக்கு வந்த புத்தி, நம்ம முஸ்லிம் மக்களுக்கு இன்னும் வரவில்லையே..?
சுலைமான் (அலை) அவர்கள் ராணுவத்தில் இணைக்கப்பட்ட உயர் ஜாதி குதிரைகளைப்பார்த்து, பரவசப்பட்டுக் கொண்டிருந்ததில் அஸர் தொழுகை நேரம் கடந்து போய் விட்டதை கவனிக்கவில்லை. அதற்கு அவர் “நிச்சயமாக நான் (சூரியன்) திரைக்குள் மறைந்து விடும் வரையில், அல்லாஹ்வை நினைவு கூர்வதை விட்டும் பொருளை அன்பு கூர்ந்து விட்டேன்.” என்று மனம் வருந்தி, “அவைகளை திரும்ப என்னிடம் கொண்டு வாருங்கள்” எனக்கூறி அவைகளை குர்பானி கொடுத்துவிட்டார்கள். என்று அல்குர்ஆன். 9 உரைக்கிறது.
ஓர் இடத்தை வேகமாக கடக்க பறந்து செல்வதைப்போல பாய்ந்து செல்லும் குதிரைகளை அல்லாஹ்வுக்காக -அவனது தொழுகை களாவாகக் காரணமாக அமைந்ததற்காக அவைகளை (ஹிஜ்ர)த் தியாகம் செய்தார்கள். அதற்குப் பகரமாக அதை விட வேகமாக தொலைதூரத்தைக் கடக்க உதவும் காற்றை அவருக்கு அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்தான். அது அவர் கட்டளையின் படி அவர் சொல்லக்கூடிய இடங்களுக்கெல்லாம் மிக்க சௌகரியமாகவே அவரை சுமந்து சென்று கொண்டிருந்தது. என்று அல்குர்ஆன் 10 கூறுகிறது.
ஆகவே நாம் அல்லாஹ்வுக்காக எதாவது ஓன்றை தியாகம் செய்தால் அதை விட சிறந்ததை அல்லாஹ் வழங்குவான். ஏனெனில் அவன் கண்ணியமானவன்.இந்த வகையில், இறை நினைவை மறக்கச்செய்யும் யாவற்றையும், இறைத்தூதர்களும், இறைநேசர்களும் ஹிஜ்ரத் செய்து விட்டனர்.
நபித்தோழர் அபுஜஹ்ம் {ரலி}அவர்கள், ஓரு டிசைனுள்ள கலர் சட்டையை நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு அன்பளிப்பு செய்தார்கள். அதை அணிந்து கொண்டு தொழுத நபி ஸல் அவர்கள், தொழுததும் அதைக் கழட்டி ஆயிஷா ரலி அவர்களிடம் கொடுத்து “இதை அபுஜஹ்மிடமே திருப்பிக் கொடுத்து விடுங்கள். தொழுகையில் ஏதேச்சையாக எனது பார்வை இதன் டிசைனின் மீது பட்டுவிட்டது. கொஞ்சம் உஷாராக விழிப்போடு இல்லாதிருந்தால், இது எனது கவனத்தை திசை திருப்பியிருக்கும். எனக்கூறினார்கள். 11
நபித்தோழர் அபூதல்ஹா ரலி அவர்கள் ஓருமுறை தனது தோட்டத்தில் தொழுது கொண்டிருக்கையில் அங்கு வந்த ஓரு பறவையின் மேல் அவர்களது பார்வை பட, கவனம் சிதறியது. தொழுகையின் பக்கம் நினைவு திரும்பாமல் “ஆகா நம்முடைய இந்தத் தோட்டம் எவ்வளவு விசாலமானதாக இருக்கிறது... வந்த பறவை வெளியேற முடியாதளவு நமது தோப்பு எவ்வளவு அடர்த்தியாக இருக்கிறது” என்று அவர்களது “இதயம்” அந்த தோப்பின் மரங்களிலும்,அதன் கிளைகளிலும் சிக்கிக் கொண்டது. பிறகு நிதானத்திற்கு வந்து தொழுகையை முடித்ததும், தன் தொழுகையின் கவனம் சிதறக் காரணமாக இருந்த இந்த தோட்டம் வேண்டாம் என அதை (ஹிஜ்ரத்) தர்மம் செய்து விட்டார்.
ஆக ஹிஜ்ரத் என்பது இடம் பெயருதல் என்பது மட்டுமல்ல ஷிர்க் (இறைவனுக்கு இணை வைப்பு) குப்ரு (இறை நிராகரிப்பு) ஃபிஸ்க் (பாவ காரியங்கள்) அனைத்தையும் விட்டு விலகி விடுவது தான் உண்மையான ஹிஜ்ரத் இறைவனுக்கு விருப்பமில்லாத, அவனுக்குப் பிடிக்காத எத்தனையோ புதிய புதிய பொருட்களின் பக்கம் நமது கவனத்தை திசை திருப்பும் நுகர்வு உலகில நாம் வாழ்கிறோம்.எனவே நுகர்வு கலாச்சாரத்தில் சிக்கி விடாமல் எச்சரிக்கையாக வாழ்வது நமது கடமை. . “அல்லாஹ் விலக்கிய அனைத்தையும் விட்டு விலகி விடுவதே ஹிஜ்ரத்” என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அருளினார்கள்.12
வரும் இஸ்லாமியப் புத்தாண்டில் இந்த ஒரு செய்தியையேனும் மனதில் நிறுத்துவீர்கள் என நம்புகிறேன்.
.........................................................................................................................................
1. முஸ்தத்ரக் ஹாகிம் 479/3-முர்ஸலான-அதாவது அறிவிப்பாளர் வரிசைத் தொடரில் நபித்தோழர் பெயர் கூறப்படாத- ஹதீஸ்.அறிவிப்பாளர் ;அம்ரு பின் தீனார்.
2. தாரிகுத்தப்ரீ; 3/277
3. முஸ்லிம் : 1163
4. தப்ரானி ; மஜ்மவுல் ஹைஸமி : 190/3
5. திர்மிதி ; 741
6. தாரிகுத்தபரி ; 4/2
7. அல்குர்ஆன் ;4.97
8. அல்குர்ஆன் ; 90.1.2
9. அல்குர்ஆன் ;38:31.32.33
10. அல்குர்ஆன் ;38:36
11. புகாரி : 373
12. புகாரி ;10
Wednesday, 13 November 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment