MANBAUL ANWAR LALPET

மதரஸா ஜாமிஆ மன்பவுல் அன்வார் 



 


முதஅவ்விதன்! முபஸ்மிலன்!! முஹம்திலன் !! முஸல்லியன்!!! வமுஸல்லிமா!! ரப்பனா ஆத்தினா ஸஆதத் தாரைன். 

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இப்பகுதியில் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று புகழ் பெற்ற, மார்க்க அறிஞர்களை உருவாக்கி அனுப்பும் ஓர் மதரஸாவை பற்றி இங்கு
அறிமுகப்படுத்துகின்றோம் .அல்ஹம்துலில்லாஹ்.

மதரஸா  ஜாமிஆ மன்பவுல் அன்வார்:- 

தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் தீன் நெறி கோட்டையாம் லால்பேட்டையில் அமைந்துள்ளது. மதரஸா ஜாமிஆ மன்பவுல் அன்வார். இது தமிழ்நாட்டில் வேலூர் மதரஸா அல் பாக்கித்துஸ் ஸாலிஹாத்திர்க்கு அடுத்து இரண்டாவது பெரிய மதரஸாவாகும். இம் மதரஸா  1862ஆண்டு ஆற்காடு நவாப்களின் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. இந்த மதரஸாவில் ஒவ்வொரு வருடமும் இருநூறுக்கும் மேற்பட்டோர் மார்க்க கல்வி கற்றுவருகின்றனர். இதில் வருடம் தோறும் 50மேற்பட்டோர் ஃபாஜில், மௌலவி மற்றும் ஹாபிழ் பட்டம் பெறுகின்றனர். இந்த மதரஸாவில் மார்க்க கல்வி கற்பதற்காக தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், தென் இந்தியா விலிருந்தும், இலங்கை போன்ற நாடுகளிலிருந்தும் ஏராளமான இஸ்லாமிய மாணவர்கள் வருகின்றனர்.

பட்டமளிப்பு விழா :- 

ஒவ்வொரு வருடமும் ஹிஜ்ரி ஆண்டில் ரமலானுக்கு முன்பு ஷாபான் மாதம் மதரசாவின் பட்டமளிப்பு விழா நடைபெறும். இரண்டு பெருநாட்களுக்கு பிறகு அடுத்து ஊரே கொண்டாடும் ஒரு விழா எதுவென்றால் அது ஜாமிஆ மன்பவுல் அன்வாரின் பட்டமளிப்பு விழாவாகும். அன்று ஊரே மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு திருவிழா போல் காட்சியளிக்கும். எட்டு வருடம் ஓதி முடிப்பவர்களுக்கு பாஜில் பட்டமும், ஏழு வருடம் ஓதி முடிப்பவர்களுக்கு மவ்லவி பட்டமும், குரானை மனனம் செய்து முடிப்பவர்க்கு ஹாபிஸ் பட்டமும் வழங்கப்படுகிறது. இங்கு ஓதி முடித்து பட்டம் பெறுவோர் தனது பெயருக்கு பின்னால் மன்பஈ எனும் வார்த்தையை சேர்த்து கொள்கின்றனர். மன்பஈ என்றால் மதரஸா ஜாமிஆ மன்பவுல் அன்வாரில் ஓதி முடித்து பட்டம் பெற்றவர் என்று பொருள்படும். பட்டமளிப்பு விழாவிற்கு தமிழ்நாட்டிலிருந்து பல புகழ் பெற்ற மார்க்க அறிஞர்களும், சமுதாய தலைவர்களும் கலந்து சிறப்பித்து வாழ்த்துரை வழங்குவார்கள்.
தாருத்  தப்சீர் கலைக்கூடம் :- 

இங்குதான் மதரஸாவின் பட்டமளிப்பு விழா நடைபெறும், இது மதரஸாவின் உட்புறம் அமைந்துள்ள பெரிய அரங்கம் ஆகும். இவ்வரங்கத்தில் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உட்கார்ந்து விழா நிகழ்ச்சிகளை காணமுடியும்.




                             ஹைருள் மில்லத் என்று அழைக்கப்பட்ட 
                         மௌலானா மௌலவி அல்ஹாஜ்  அல்லாமா 
                           முகம்மது அமானி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்.

மதரஸாவின் புகழ்பெற்ற முதல்வர்கள்:- 

மதரஸாவின் முதல்வர்களாக (பெரிய ஹஜ்ரத்களாக ) மறைந்த புகழ்பெற்ற மார்க்க அறிஞர்கள் இருந்துள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஹைருள் மில்லத் என்று அழைக்கப்பட்ட மௌலானா மௌலவி அல்ஹாஜ்  அல்லாமா முகம்மது அமானி ஹஜ்ரத் கிப்லா அவர்கள், மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்லாமா அப்துல்லாஹ்  ஹஜ்ரத் கிப்லா  அவர்கள் , மௌலானா மௌலவி அல்ஹாஜ், அல்லாமா  இப்ராஹீம் ஹஜ்ரத் கிப்லா  அவர்கள் மற்றும் சம்சுல் மில்லத் என்று அழைக்கப்பட்ட மௌலானா மௌலவி அல் ஹாஜ், அல்லாமா  கே. எ. முகம்மது ஜக்கரிய்யா ஹஜ்ரத் கிப்லா போன்றவர்களின் நிர்வாகத்தாலும், அவர்களின் புகழாலும் ஜாமிஆ மன்பவுல் அன்வார் புகழ்பெற்றது என்றால் அது மிகை ஆகாது. இன்னும் ஏராளமான பெரும் புகழ்களை தன்னகத்தே பெற்றுள்ளது. அதனை பற்றி விவரிக்க இங்கு பக்கங்கள் போதாமல் போகலாம்.


சம்சுல் மில்லத் என்று அழைக்கப்பட்ட, மௌலானா மௌலவி அல்ஹாஜ், அல்லாமா  கே. எ. முகம்மது ஜக்கரிய்யா ஹஜ்ரத் கிப்லா அவர்கள்.



மதரஸாவின் சிறப்பம்சம்:- 

இம் மதரஸாவில் தங்கி மார்க்க கல்வி கற்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் லால்பேட்டையில் உள்ள வீடுகளிலிருந்து மதியம் மற்றும் இரவு உணவு டிபன் கேரியரில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு மாணவரையும் தங்கள் வீட்டு பிள்ளைகளைப்போல் கருதுகின்றனர். காலை உணவிற்கு மதரசா நிர்வாகம் பொறுப்பேற்றுள்ளது.

மதரஸா நிர்வாக சபை:- 

மதரசாவை நிர்வாகத்தை கவனிக்க மதரஸா நிர்வாக சபை அமைக்கப்பட்டுள்ளது. நிர்வாக சபைக்கு உறுப்பினர்கள் லால்பேட்டையின் ஒவ்வொரு முஹல்லாவிளிருந்தும் ஒரு குறிப்பிட்ட உறுப்பினர்கள் முஹல்லாவாசிகளால் தேர்ந்தடுக்கப்பட்டு மதரஸா நிர்வாக சபைக்கு அனுப்படுகின்றனர், அவர்கள் ஒவ்வொரு மாதமும் கூடி வரவு செலவு கணக்குகள் , மதரஸா அபிவிருத்தி திட்டங்கள், பராமரிப்பு மற்றும் நிர்வாகதைப்பற்றியும் விவாதிப்பார்கள்.

லால்பேட்டையைப்பற்றி;-

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி வட்டத்தில் சிதம்பரத்திலிருந்து 22கி.மீ. நெய்வேலியிலிருந்து 30கி.மீ. காட்டுமன்னார்குடியிலிருந்து 3கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, லால்பேட்டை. லால்பேட்டையின் இயற்ப்பெயர் லால்கான்பேட்டை ஆகும். இந்தபெயர் காலப்போக்கில் மாறி லால்பேட்டை என்று அழைக்கப்படுகிறது. பெயர் எப்படி உருவானது என்பதை, லால்பேட்டை உருவானது எப்படி என்ற தலைப்பில் பின்னர் கீழே காண்போம்.
இன்ஷா அல்லாஹ்.
இவ்வூர் முஸ்லிம்கள் அதிக அளவிலும் ஹிந்துக்கள் மற்றும் கிருஸ்தவர்கள் குறைந்த அளவிலும் ஒற்றுமைக்கு எடுத்துகாட்டாக இருக்கும் ஓர் ஊராகும். லால்பேட்டை சிதம்பரம் நாடாளுமன்ற மற்றும் காட்டுமன்னார்குடி சட்டமன்ற தொகுதியின் கீழ்வரும் ஓர் பேரூராட்சியாகும்.
இவ்வூரில் முஸ்லிம்கள்,ஹிந்துக்கள் மற்றும் கிருஸ்தவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

லால்பேட்டை உருவானது எப்படி:-

வெள்ளையர்களின் ஆட்சிகாலத்திலும் அதற்க்கு முன்பும் இந்தியாவில் நவாப்களின் ஆட்சிக்காலம் சிறந்த ஆட்சிகாலம் என்றே சொல்லலாம், அவ்வரிசையில் சிறந்த ஆட்சிப்புரிந்த ஆற்காடு நவாப்களில் குறிப்பிடத்தக்கவர் நவாப் ஜனாப் அன்வர்தீன் ஆவார்.

அவரின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஜனாப் லால்கான் எனும் பெயருக்குரிய செல்வமகன் இந்த பகுதிக்கு வருகை தந்தபோது அவருடைய கடைக்கண் பார்வையில் பட்டதுதான் இவ்வூராகும். இவ்வூரை உருவாக்கி நிர்மாணித்த பெருமை இவரையே சேரும்.

அவருடைய வருகைக்கு முன்பு ஒரு சிலரே ஆங்காங்கே வாழ்ந்து வந்த குக்கிராமங்கலாக இவ்வூர் இருந்தது என்று கூறப்படுகிறது. லால்கான் வருகைக்கு முன்பு இங்கு ஊரே இல்லையென்றும் கூறப்படுகிறது. இரு வேறு கருத்துகள் கூறப்பட்டாலும் லால்கான் வரவுக்கு பின்னர்தான் இவ்வூர் வளர்ச்சி அடைய ஆரம்பித்தது என்பதை பின்வரும் குறிப்புகளிலிருந்து அறியமுடியும்.

அமைச்சர் லால்கான் இப்பகுதியில் தங்கி மக்களுக்கு சிறந்த சேவைகளை ஆற்றியுள்ளார். இப்பகுதிக்கு “கான்இருப்பு” என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. அந்த பெயர் இன்றும் கூட அப்பகுதிக்கு காங்கிருப்பு என்று அழைக்கப்படுகிறது இப்பகுதியை சிதம்பரத்திலிருந்து லால்பேட்டையை நெருங்கும்போது காங்கிருப்பை காணலாம் இது லால்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியாகும் மேலும் இப்பகுதி விவசாய பாசனத்திர்க்கென லால்கான் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்த வாய்க்கால்களுக்குகூட “கான் வாய்க்கால்” என இன்றும் அழைக்கப்படுகிறது.

அமைச்சர் லால்கான் தன் நிர்வாகத்தை இங்கே துவக்கி இதை ஒரு பேரூராக மாற்ற நினைத்து (லால்கான் ) ஜாமிஆ மஸ்ஜிதை (தற்போது பெரிய பள்ளிவாசல் என்று அழைக்கப்படும் லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் ) கட்டினார். பள்ளிவாசலின் முன்புறம் நான்கு தெருக்களை நிறுவி அதில் முஸ்லீம் மக்களை கொண்டுவந்து குடியமர்த்தி அதற்க்கு மேலதெரு, கீழ தெரு , வடக்கு தெரு, தெற்கு தெரு என பெயரிட்டார் அத்துடன் குற்றே வேலர்கள் என அழைக்கப்பட்ட மக்களை தெற்கு தெருவிற்கு தெற்க்கே குடியமைத்து அதற்க்கு குற்றே வேலர் தெரு எனப் பெயரிட்டார் அது காலப்போக்கில் மாறி கொத்தவால் தெரு என அழைக்கப்படுகிறது.
இவ்வாறாக இஸ்லாமிய வாழ்வு இங்கே வளர ஆரம்பித்தது, இவ்வூரை உருவாக்கி வளரவைத்த அந்த மாபெரும் அமைச்சரின் பெயரே இன்று வரை நிலைத்து நிற்கிறது. அந்த பெயர்தான் லால்(கான்) பேட்டை.

பாகுபாடற்ற இஸ்லாமிய உணர்வு மிக்க லால்கான் அவர்கள் வீராணம் கரையோரம் சத்திரம் சாவடி ஒன்றைக்கட்டி அதன் கரையோரம் கோவில் ஒன்றையும் அமைத்து ஒரு குளமும் தோண்டியுள்ளார் அந்த குளம் திருக்குளம் என்று இந்நாள்வரை அழைக்கப்படுகிறது அதன் கரையோரம் எட்டு ஜாதியினரை குடியமர்த்தினர்

இப்படியாக ஜாமிஆ மஸ்ஜித் பகுதியில் முஸ்லிம்களும் வீராணம் பகுதியில் ஹிந்துக்களும் ஒரே சமகாலத்தில் குடியமர்த்தி அவர்களின் வாழ்க்கைக்கான தேவைகளும் லால்கானால் வழங்கப்பட்டு வளர ஆரம்பித்த இவ்வூர் இன்று மக்கள் தொகை பெருகி பல தெருக்களும், புதிய நகர்களும் உருவாகி செல்வ செழிப்புடன் ஒரு நகருக்கு இணையான பேரூராய் வளர்ந்து முஸ்லிம்களும் மற்ற மதத்தினரும் ஒன்றாக ஒற்றுமையாக வாளும் ஓர் சிறந்த ஊராகும்
லால்பேட்டை மக்களின் தொழில் மற்றும் வருமாணம்:
லால்பேட்டையில் நெல், உளுந்து, பயறு, கரும்பு, வெற்றிலை ஆகியவை சாகுபடி செய்யப்படுகிறது, லால்பேட்டை இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் உலகின் பலநாடுகளில் தங்கி பணிபுரிகின்றனர் அதில் குறிப்பாக ஐக்கிய அமிரகம்,சவுதி அரேபியா, மலேசியா,சிங்கப்பூர், கத்தார், குவைத் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளாகும் மத்திய அரசிற்கு அந்நிய செலவாணியை பெற்று தரும் முக்கிய ஊர்களில் லால்பேட்டையும் ஒன்றாகும்.
லால்பேட்டையின் மக்கள் தொகை:
லால்பேட்டையின் மக்கள் தொகை சுமார் 20197 (2007 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி) இதில் ஆண்கள் சுமார் 54% மற்றும் பெண்கள் சுமார் 46% ஆகும்.
லால்பேட்டையின் சுற்றியுள்ள முஸ்லீம் கிராமங்கள்: எள்ளேரி, கொள்ளுமேடு , ஆடூர் , கந்தகுமரன், நெடுன்ச்சேரி, ஆயங்குடி.

அருகிலுள்ள ரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்கள்:-

ரயில் நிலையம் சிதம்பரம் ,
விமானநிலையம் திருச்சி மற்றும் சென்னை. 



முடிவுரை:- 

150ஆண்டு கள் பழமை வாய்ந்த புகழ் பெற்ற மதரஸா  ஜாமிஆ மன்பவுல் அன்வார் மேலும் கியாம நாள்  பல நூற்றாண்டுகளுக்கு ஆலிம்களையும், ஹாபிழ்களையும், மார்க்க அறிஞர்களையும் உருவாக்கிடவும், அதன் புகழ் என்றென்றும் குறையாமல் இன்னும் பல புகழ்களைப் பெற முஸ்லிமாகிய நாம் அனைவரும்  வல்ல அல்லாஹ்விடம்  துஆச் செய்யுமாறு உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் வஸ்ஸலாம் ...


நன்றி ;--லால்பேட்டை எக்ஸ்பிரஸ்.காம்

வெளியீடு ;-- மன்பஈ ஆலிம் .காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்

1 comment:

  1. http://www.massmediapower.in/issue/april_2014/index.php?page=6

    ReplyDelete