Wednesday, 13 November 2013

ஆஷூரா நோன்பும் அதன் மாண்பும்.!!!

ஆஷூரா முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாள். அன்று நோன்பு வைப்பது சுன்னத்து.

எல்லா நபிமார்களும் அன்று நோன்பு வைத்தார்கள். எனவே நீங்களும் நோன்பு வையுங்கள் - நபிமொழி.1

அன்று யூதர்கள் கிறிஸ்தவர்கள் குறைஷிகள் என எல்லா சமூகத்தாரும் நோன்பு பிடித்து ஆஷூரா தினம் அனுஷ்டிக்கிறார்கள்.

''யூதர்கள் கிறிஸ்தவர்கள் முஷ்ரிகீன்களுக்கு மாறு செய்யுங்கள்''2

இப்னு அப்பாஸ் ரலி அறிவிக்கிறார்கள்: ஆஷூரா தினம் நோன்பு பிடியுங்கள். யூதர்களுக்கு மாறு செய்யுங்கள் .இதற்கு ஒரு நாள் முன்பு அல்லது இதற்கு ஒருநாள் பின்பு நோன்பு வையுங்கள் என்று நபிகள் நாயகம் ஸல் சொன்னார்கள் (நூல்: அஹமது )3

நான் அடுத்த ஆண்டு இருந்தால் ஒன்பதாவது நாள் நோன்பு வைப்பேன் என்று சொன்ன சர்தார் நபி ஸல் அவர்கள் அதற்கு முன்பு மறைந்துவிட்டார்கள் (முஸ்லிம். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலி )

இந்த நபிமொழிக்கு இரண்டு விதமாக பொருள் செய்யப்படுகிறது.

ஒன்று : பத்தாவது நாள் நோன்பை ஒன்பதாவது நாளுக்கு மாற்றுவேன். இரண்டாவது: பத்தாவது நாளுடன் ஒன்பதாவது நாளையும் சேர்த்து வைப்பேன் இதை விளக்குவதற்கு முன்பு அவர்கள் மறைந்துவிட்டதால் ஒன்பது பத்து இரண்டு நாளும் நோன்பு வைப்பதே பேணுதலாகும் .இதன்படி ஆஷூரா நோன்புக்கு மூன்று நிலைகள்:

1 . குறைந்த பட்சம் பத்தாவது நாள் மட்டும் நோன்பு வைப்பது
2 . அத்தோடு ஒன்பதாவது நாள் நோன்பையும் சேர்த்து வைப்பது சிறப்பு.
3. பத்தோடு ஒன்பதையும் பதினொன்றையும் சேர்த்து மூன்று நாள் வைப்பது ரொம்ப சிறப்பு.
நபித்தோழர் இப்னு அப்பாஸ் ரலி மூன்று தினங்கள் நோன்பு வைப்பார்கள்.

யூதர்களுக்கு ஒப்பாவதால் பத்தாவது நாள் மட்டும் நோன்பு வைப்பது மக்ரூஹ் என்று முஹீத் என்னும் கிதாபில் வந்துள்ளது.

பத்தாவது நாள் மட்டும் நோன்பு வைப்பதை சிலர் மக்ரூஹ் ஆக்கியுள்ளனர். அனால் அதிகமான அறிஞர்கள் அதை மக்ரூஹ் எனக் கொள்ளவில்லை
ஏனெனில் அது (ஆஷூரா தினம்) சிறப்பான தினங்களில் ஒன்றாகும். இவ்வாறு அல்பதாயிஃ  என்ற கிதாபில் காணப்படுகிறது.

இந்த வகையில் ஆஷூரா நோன்பும் அதன் சிறப்பும் ஆஷூராவின் அனைத்து சரித்திர நிகழ்வுகளும் ஆதிகால வரலாற்றுத் தொடர்புடையதாகும். ஆதிபிதா ஆதம் அலை அவர்களிடமிருந்து ஆரம்பமாகி நூஹ் நபி அலை, இப்ராஹீம் அலை அவர்களில் தொடர்ந்து செல்லும் இந்த வரலாறு மூஸா நபியின் சரித்திரத்தில் சங்கமித்து உத்தம நபி (ஸல்) அவர்களின் உயர்வான கலாச்சாரத்தில் கலந்து உறவாடுகிறது.

ஆஷூராவின் இந்த நோன்பும் அதன் மாண்பும் பின்னாளில் ஹிஜ்ரி 61ல் நிகழ்ந்த கர்பலாக் காவியத்தோடு தொடர்புடையதல்ல. எனினும் கல்லும் கரைந்துருகும் கர்பலா தியாக வரலாறும் அதன் சோக சரித்திரமும் இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான சிறப்பிற்குரிய ஆஷூரா தினத்தில்தான் நடந்தது.

இதன்மூலம் இமாம் ஹுசைன் ரலி அவர்களுக்கு அல்லாஹ் அவனது நபிமார்களின் வெற்றிக்குரிய நல்ல தினத்தில் ஒரு இடமளித்து அதில் ஷஹீதாகும் பாக்கியமளித்து கவுரவித்துள்ளான். இது சந்தேகமே அல்லாமல் ஒரு தனித்துவம் வாய்ந்த இறை ரகசிய ஏற்பாடு என்பது மட்டும் திண்ணம்.


எனது சமுதாயத்திற்கு நான் சிரமத்தைக் கொடுத்துவிடுவேனோ என்று அச்சம் மட்டும் இல்லையென்றால் (நான் அனுப்பும்) எந்த ராணுவத்திற்குப் பின்னரும் (நானும்  போகாமல்) உட்கார்ந்திர்க்கமாட்டேன். நிச்சயமாக நான் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு மீண்டும் கொல்லப்பட்டு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு மீண்டும் கொல்லப்படுவதையே விரும்புகிறேன். (புஹாரி:36) என்று ஒருமுறை பெருமானார் (ஸல்) அவர்கள் ஷஹாதத் (அறப்போரில் தாம் வீரமரணம்) அடையும் ஆசையை வெளியிட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் அஹ்மது நபி முஸ்தபா (ஸல்) அவர்களின் ஆசை எதுவாக இருந்தாலும் அதை அல்லாஹ் எப்படியும் நிறைவேற்றி வைத்திடுவான். ஆனால் அவனுடைய ஹபீப் (அன்பர்) அண்ணல் நபி (ஸல்) அவர்கள் போர்க்களத்தில் கொல்லப்பட்டுக் கிடப்பதை அல்லாஹ் விரும்பவில்லை. அது அவர்களின் மேலான உன்னத ஸ்தானத்திற்கு உகந்ததாயும் இல்லை. ஆகவே வெளிப்படையான ஷஹாதத்-வீரமரணம்- நாயகத்தின் நற்பெயருக்கு நன்மை சேர்ப்பதாக இருக்கிறது என்பதால் அவர்களுக்கு நஞ்சூட்டியதின் மூலம் அந்தரங்க ஷஹாதத்(தின் அந்தஸ்)தை அல்லாஹ் அவர்களுக்கு அளித்து அவர்களின் சதைத்துண்டான இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் ஷஹாதத்தின் வழியாக வெளிப்படையான ஷஹாதத்தையும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கி ஷஹாதத்தைப் பரிபூரணப் படுத்தினான் என்று இந்தியாவின் பிரபலமான முஹத்திஸ் (நபிமொழி அறிவிப்பாளர்,ஆய்வாளர்) ஷாஹ் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் தமது 'சிர்ருஷ் ஷஹாததைன்' என்ற நூலில் எழுதியுள்ளார்கள்.

முடியாட்சிக்கு ஆதரவாக கரம் கொடுக்கவும் குரல் கொடுக்கவும் மறுத்த இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் குரல்வளை அறுக்கப்பட்டது. உலகில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தி குடியாட்சி தத்துவத்தை பாதுகாக்க பெருமானார் (ஸல்) அவர்களின் பேரப்பிள்ளை ஹசன் (ரலி) அவர்களின் தியாகம் இன்று மட்டுமல்ல..பாருள்ள வரை பேசப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் முதன் கலிபாவாக ஹழ்ரத் அலி ரலி அவர்கள்தான் வந்திருக்கவேண்டும் . அவர்கள்தான் நபியின் வாரிசு; மருமகனாரும் கூட. எனவே அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தது அநியாயமாகும் என்று ஷியாப் பிரிவினர் செய்யும் தவறான பிரச்சாரம் ஷியாக்களின் விஷமத்தனமாகும். ஏனெனில் இது உண்மைக்கு மாற்றமானது. மட்டுமல்ல.. நாம் பெரிதும் மதிக்கிற அவர்களும் கொண்டாடுகிற கர்பலா நாயகர் நாயகம் (ஸல்) அவர்களின் நெஞ்சம் நிறைந்த பேரர் ஹுசைன்  (ரலி) அவர்கள், வாரிசுகளின் பரம்பரை ஆட்சி முறையை  எதிர்த்து போர் தொடுத்து இறுதியில் உயிர்கொடுத்த அவர்களின் ஷஹாதத்தை உயிர் தியாகத்தை கொச்சைப் படுத்துவதாகும்.

நாயகம் (ஸல்) அவர்கள் எந்த பதவியையும் பொறுப்பையும் தகுதி தராதரம் பாத்துதான் ஒருவருக்கு கொடுப்பார்களே யன்றி சொந்தம் பந்தம் மட்டும் பார்த்து யாருக்கு எப்போதும் எதையும் வழங்கவே மாட்டார்கள். இது நபியவர்களின் முழுமையான ஜீவித சரித்திரத்தைக் கருத்தூன்றிப் படிப்பவர்களுக்கு தெரியாத விஷயமோ புரியாத புதிரோ அல்ல.

அந்த சரித்திரம் என்ன?  அடுத்து வரும்.. இன்ஷா அல்லாஹ் !


No comments:

Post a Comment