கஃபா வலிமார்களை சந்திக்க ஆசை கொண்டு அவர்களை வரவேற்க நகர்ந்து வருவதும், ஏன்! அவர்களை தவாஃப் செய்வதும் கூட சாத்திமான ஒன்றே!
இதுவெல்லாம் வலிமார்களின் கராமத் [அற்புதம்] என்று, ஷாமி,பஹ்ருர்ராயிக்,தஹ்தாவி போன்ற ஹனஃபி மத்ஹபில் ஏற்கத்தக்க ஃபிக்ஹ் நூல்களில் வந்துள்ளது.
சில வலிமார்களுக்கு அது நிகழ்ந்துள்ளது என்பதை நம்பத்தகுந்த இமாம்கள்,ஆலிம்கள் பதிவு செய்துள்ளார்கள்! ஆனால், இதுமாதிரி யான செய்திகள் அபத்தமானது,தவறானது என்று நவீன வாதிகள் வாதிக்கின்றனர்.ஆனால் அவர்கள் தங்கள் வாதத்தை நியாயப் படுத்திட எந்த ஆதாரங்களையும் முன் வைக்க வில்லை.எனினும், இந்த விஷயத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட ஐயங்களையே ஆதார மாலைகளாகத் தொடுத்து தங்கள் கழுத்துகளில் மாட்டிக் கொள்கிறார்கள்.உங்கள் காதுகளில் பூ சுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள்
v “கஃபா ஒரு கல்! அது ஒரு மனிதனின் மீது ஆசைப்படுவதோ, அவரைக் காண வேண்டும் என ஆவல் கொண்டு இடம் பெயர் வதோ, நகர்ந்து வருவதோ சாத்தியமற்றது!”
v குர்ஆன்,ஹதீஸில் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
v கஃபாவின் அந்தஸ்து, படைப்பில் சிறந்த அண்ணல் எம்பெருமா னார் [ஸல்] அவர்களால் அதை தவாஃப் செய்து கண்ணியப்படுத் தும் அளவுக்கு மிக உயர்ந்தது. அவ்வாறிருக்க அது தன்னை விட அந்தஸ்தில் குறைந்த வலிமார்களை வலிய வந்து, தவாஃப் செய்தது என்பதெல்லாம் புரட்டல்! சரியான பேத்தல்!
v நாயகம் [ஸல்] அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்று ஆறு வருடங்கள் கழிந்த பின், கஃபாவைக் காண ஆவல் கொண்டு தம் தோழர்களுடன் உம்ரா செய்ய புறப்பட்டார்கள்.அப்போது “ஹுதைபிய்யா” என்ற இடத்தில் வழி மறிக்கப்பட்டு, அங்கே வைத்து ஏற்பட்ட ஒரு உடன் படிக்கையின் காரணமாக அந்த வருடம் உம்ரா செய்ய முடியாமல் மதீனாவிற்கு திரும்பி வந்து விட்டார்கள். அந்த நேரத்தில் நபிகளாருக்கு இடம் பெயர்ந்து வராத கஃபா, வலிமார்களுக்கு மட்டும் எங்ஙனம் வந்தது? நபிகள் நாயகம் [ஸல்] அவர்களுக்கே கொடுக்கப்படாத கௌரவம் வலிமார்களுக்கு எப்படி கொடுக்கப்பட்டது?
இதுவெல்லாம் அவர்களின் பசப்பு வார்த்தைகள்! பசையில்லா ஜீவனில்லா வாதங்கள்!
“அவ்லியாக்களுக்கு கராமத்[ அற்புதம்] உண்டு என்பது உண்மை” இதை பொதுவாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் சுன்னத் ஜமாஅத்தின் கொள்கை!
ஒரு குறிப்பிட்ட கராமத்தை]அற்புதத்தை] நம்புவதும், நம்பாமல் இருப்பதும் அதை எடுத்து எழுதியிருக்கும் ஆதார நூல்களைப் பொருத்த விஷயம்.
நாம் ஃபிக்ஹ் நூல்களை மதிக்கிறோம்! எனவே அதில் வரும் செய்திகளை ஏற்கிறோம் என்பதைத் தவிர, கஃபா தவாஃப் செய்தது என்பது நம்பியே ஆக வேண்டிய கொள்கைப் பட்டியலில் இடம் பெற்றிருக்க வில்லை.
ஒரு நூலை ஏற்பதும் ஏற்காமல் இருப்பதும் அவரவர்களின் உரிமை! ஆனால், அந்த நூலில் கூறப்பட்டிருக்கும் ஓர் செய்தியை அதாவது ஒரு கராமத்தை, அது நடக்க வில்லை! என மறுக்க வேண்டுமெனில், தகுந்த, சரியான சரித்திர அல்லது அறிவியல் சான்றுகளைக் காட்டியாக வேண்டும், நம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை என்பது மட்டும் வரலாற்றைப் பொய்யாக்க போதுமான காரணமாக இருக்க முடியாது.
நிகழ்வதற்கு சாத்தியமான எதுவும் கராமத்தாக [அற்புதமாக] நடக்கலாம். ஒரு வலியுல்லாஹ்விற்கு நிகழ்ந்த கராமத்தை, அது நிகழ்ந்திருக்க முடியாது, நடக்க சாத்தியமற்றது என்று தீர்மானிக்க, அவரை விட சிறந்த இன்னொரு வலிக்கு அல்லது நபிக்கு அதுமாதிரி நிகழ வில்லை என்பது மாத்திரம் தக்க காரணமாக முடியாது.
இஸ்ரவேலர்கள் அவர்களது தண்டனை காலத்தில் “தீஹ்” என்ற மைதானத்தில் சுற்றித் திரிந்த சமயம்,உணவுக்கு வழியில்லாமல் திண்டாடி அவர்களது நபியிடம் முறையிட்ட போது, “அல்லாஹ் மன்னு ஸல்வாவை இறக்கி வைத்தான்” என்று திருக்குர்ஆனில் [2 ; 57] வந்துள்ளது.1
இஸ்ரவேலர்களையும்,அவர்களது நபியையும் விட பன்மடங்கு சிறந்த எம்பெருமான் [ஸல்] அவர்களும்,அவர்களது ஹாஷிம் முத்தலிப் குடும்பத்தாரும்,மூன்று வருட காலம் சமூக பகிஷ்காரம் செய்யப்பட்டு பசியால் வாடிய போது இறங்காத “மன்னு ஸல்வா” இஸ்ரவேலர்களுக்கு மட்டும் எப்படி இறங்கியது?என்று அவர்கள் வாதப்படி கேட்கலாமா?
“நான் உறக்கத்தில் இருக்கையில் [கனவில்] பால் பாத்திரம் கொண்டு வரப்பட்டது.அதை நான் பருகினேன். [பால் என் உடல் முழுவதும் வியாபித்து,கடைசியில்] என் நகங்களின் வழியாக வெளியேறி, என் தாகம் முழுவதும் தீரும் வரை பருகினேன்.பின்னர் எனது [பாலின்] மிச்சத்தை உமருக்குக் கொடுத்தேன்” என்று நாயகம் [ஸல்] அவர்கள் தன் கனவைப் பற்றி ஸஹாபாக்களிடம் சொல்லிக் கொண்டிருந்த போது,அவர்கள் கேட்டார்கள் ; “யா ரசூலல்லாஹ்! இதற்கு [கனவில் நீங்கள் குடித்து உமருக்குக் கொடுத்த பாலுக்கு] என்ன வியாக்கியானம் செய்தீர்கள்?” [இல்மு] கல்வி என்று நாயகம் [ஸல்] அவர்கள் பதில் சொன்னார்கள். [புகாரி :1 /18] 2
உமரை விட சிறந்த அபூபக்கருக்கு இல்லாத இந்தச்சிறப்பு உமருக்கு எப்படி கிடைத்திருக்க முடியும் என்று அவர்களின் கூற்றுப்படி கேட்க முடியுமா?
மன்னு ஸல்வாவிற்கு – குர்ஆன் ஆதாரமும்,ரசூலுல்லாஹி [ஸல்] அவர்கள் பருகிய மிச்சப்பாலை உமருக்குக் கொடுத்தார்கள் என்பதற்கு புகாரியின் ஹதீஸ் ஆதாரமும் இருக்கிறது. ஆனால், வலிமார்களுக்காக கஃபா இடம் பெயர்ந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லையே! என்று சொல்லி அவர்கள் நம்மை திசை திருப்பலாம்!
ஆதாரம் இருக்கிறதா? இல்லையா? என்பதை பிறகு பார்ப்போம். ஆனால் ஏற்கனவே நாம் தெளிவு படுத்தி விட்டோம். வலிமார் களுக்கு கஃபா இடம் பெயர்ந்தது என்பதை நம்புவதும்,நம்பாமல் இருப்பதும் அதன் செய்தி ஆதார வலிமையைப் பொருத்தது என்று!
ஆனால் இதை மறுப்பதற்கு அவர்கள் கையாண்ட உத்தி தவறானது.அவர்களின் வாதமுறை தவறானதும், பிழையானது மாகும்.மேலும் ஒருவருக்கு ஒரு சிறப்பு கிடைத்திருக்க வேண்டு மெனில், அவரை விட சிறந்த வேறொருவருக்கு அது கிடைத்திரு க்க வேண்டும்.வலிமார்களுக்கு கஃபா இடம் பெயர்ந்த சிறப்பு கிடைத்திருக்க வேண்டுமெனில்,அவர்களை விட சிறந்த நாயகம் [ஸல்] அவர்களுக்கு அது கிடைத்திருக்க வேண்டும் என்ற அவர்களின் வாதம் அர்த்தமற்றது.அடிப்படையற்றது.இந்த அவர்களின் ஃபார்முலாவைத்தான் தவறு என கூற வருகிறோம்.
ஒரு நபிக்கு வழங்கப்பட்ட ஒரு முஃஜிஸா,ஒரு வலியுல்லாஹ் விற்கு கராமத்தாக நிகழலாமா? என்பதில் உலமாக்களிடம் சர்ச்சை உண்டு.[அதை விரிவாக இங்கு கூறுமின் பேச்சு நீளும்] ஆனால் நபிக்கே முஃஜிஸாவாக நடக்காத ஒன்று, ஒரு வலிக்கு எங்ஙனம் கராமத்தாக நிகழ முடியும்? என்ற அவர்களின் சிந்தனை புதுமையானது; முன்னோர்களிடம் காணப்படாதது.
இந்த சிந்தனை அடிப்படையிலேயே தவறானதாகும். முஃஜிஸா வானாலும், கராமத்தானாலும் அவை அல்லாஹ்வின் ஆற்றலின் வெளிப்பாடுகள் தான்.அல்லாஹ்வுக்கு முடியாதது என்று எதுவும் இல்லை; எனவே நபிக்கே நடக்காத,நடக்க முடியாத ...... என்ற அவர்களது “நினைப்பு” அல்லாஹ்வைப்பற்றிய அவனது ஆற்றலைப் பற்றிய தவறான நினைப்பாகும்.
“நிச்சயமாக சில நினைப்பு பாவமானது” [திருக்குர்ஆன் 49 :12] 3
நாம் இப்போது மீண்டும் கஃபாவினுள் நுழைவோம்! நாயகம் [ஸல்] அவர்கள் கஃபாவிற்கு கண்ணியம் செய்தார்கள் என்பதால் கஃபா அவர்களை விட உயர்ந்ததாகி விட முடியாது! பொதுவாக பள்ளிவாசல்களைக் கூட நபி [ஸல்] அவர்கள் கண்ணியப்படுத்தி இருக்கிறார்கள். இதனால் பள்ளிவாசல்கள் அவர்களை விட உயர்ந்ததாகி விடுமா?
“கஃபாவின் கண்ணியத்தை விட ஒருமுஃமினின் கண்ணியம் எந்த வகையிலும் குறைந்ததல்ல”
இன்னும் சொல்லப் போனால்,ஒரு படி கூடவே, இப்னு உமர் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.
“நான் நாயகம் [ஸல்] அவர்களைப் பார்த்தேன். கஃபத்துல்லாஹ் வை தவாஃப் செய்து கொண்டிருக்கிறார்கள்” அப்போது அதைப் பார்த்து சொல்கிறார்கள்;
உன்னை மனமாக்கியது தான் என்ன? உனது கண்ணியத்தை மகத்துவ மிக்கதாக ஆக்கியது தான் என்ன? முஹம்மதின் ஆன்மா யார் கைவசமிருக்கிறதோ அவன் மீது ஆணையாக,
“ஒரு முஃமினின் கண்ணியம் அல்லாஹ்விடத்தில் உன்னை விட மிக உயர்வானது!” [இப்னு மாஜா,பக்கம் :290] 4
எனவே கஃபாவை விட வலிமார்களின் அந்தஸ்து குறைவானது என்ற அவர்களின் வாதம் இந்த ஹதீஸுக்கு முரணானதாகும்.
கஃபாவைக் காண முஃமின்களும் செல்கிறார்கள்.அவ்வாறே நபிமார்களும், வலிமார்களும் கூட செல்கிறார்கள்.அதனால் கஃபா அவர்களை விட சிறந்தது என்று சொல்ல முடியாது. ஏனெனில், அபூபக்கர் [ரலி] அவர்கள் நபி [ஸல்] அவர்களின் மறைவிக்குப் பின் உமர் [ரலி] அவர்களிடம் சொன்னார்கள்; நம்மை உம்மு அய்மன் [ரலி] அவர்களின் இடத்துக்குக் கூட்டிச் செல்லுங்கள். நாயகம் [ஸல்] அவர்கள் தங்கள் ஜீவிய காலத்தில் அந்த அம்மையாரை சந்தித்து வந்ததைப் போலவே, நாமும் சென்று அவர்களை சந்தித்து விட்டு வருவோம். [முஸ்லிம்,2/291] 5
இந்த ஹதீஸில், உம்மு அய்மன் [ரலி] அவர்களை ரசூல் [ஸல்] அவர்களும்,தொடர்ந்து அபூபக்கர் [ரலி]அவர்களும்,உமர் [ரலி] அவர்களும் சென்று சந்தித்தார்கள் என்பது தெரிகிறது. சந்திப்பவரை விட சந்திக்கப்படுபவர் மேலானவராக இருக்க வேண்டுமென்றால் நாயகம் [ஸல்] அவர்களையும்,இரண்டு கலீஃபாக்களை விடவும் உம்மு அய்மன் [ரலி] அவர்கள் சிறந்தவர்கள் என்றல்லவா அர்த்தம் வரும்? இது சரியா? இல்லையே!
நாயகம் [ஸல்] அவர்களுக்குக் கூட இடம் பெயராத கஃபா வலிமார்களுக்கு இடம் பெயர்ந்தது என்பதால்,நபியை விட வலிமார்கள் உயர்ந்து விட்டார்கள் என்றாகாது.
ஏனெனில் நாயகம் [ஸல்] அவர்கள் சொன்னார்கள்; “சொர்க்கம் எனக்கு காட்டப்பட்டது.அப்பொழுது அபூதல்ஹா [ரலி] அவர்களின் மனைவியைப் பார்த்தேன்.மேலும், எனக்கு முன்னால் காலடி ஓசையைக் கேட்டேன்.யார் [அது] என்று பார்த்தால் அது பிலாலாகும்”. [முஸ்லிம், மிஷ்காத் : 575] 6
ஹஜ்ரத் பிலால் [ரலி] அவர்கள், நாயகம் [ஸல்] அவர்களுக்கு முன்னால் நடந்து போனார்கள் என்பதினால், நபி [ஸல்] அவர்களை விட பிலால் [ரலி] அவர்கள் உயர்ந்து விட்டார்கள் என்று யாரும் கருத மாட்டார்கள்.பொதுவாக பணிவிடை செய்யக் கூடிய ஒருவர், யாருக்கு பணிவிடை செய்கிறாரோ அவரை விட முந்திச் செல்வதே வழக்கம்.இந்த அடிப்படையில் தான் இந்த ஹதீஸை எடுத்துக் கொள்ள வேண்டும்.வெறுமனே மேலோட்ட மாக பார்த்து இந்த ஹதீஸை நாம் ஒதுக்கி விட மாட்டோம். மேலும் இதனால் பிலால் [ரலி] அவர்கள் மற்றெல்லா நபித் தோழர்களை விட சிறந்தவர்களாக ஆகி விடமாட்டார்கள்.
இதோ உஹது மலை.நம்மை அது விரும்புகிறது,நாமும் அதை விரும்புகிறோம். [புகாரி] 7
உஹது மலை என்பது ஒரு கற்பாறை.அது நேசிக்கும் என்றால் கஃபா நேசிக்காதா?
“சொர்க்கம் மூவரைக் காண ஆசைப்படுகிறது.அலி,அம்மார், ஸல்மான் [ரலி] ஆகியோர் தாம் அவர்கள்” என்றார்கள் நபி [ஸல்] அவர்கள். [திர்மிதி,மிஷ்காத் : 578] 8
“ ஸஃது பின் முஆத் [ரலி] அவர்களின் மரணத்தின் போது ரஹ்மானின் அர்ஷ் குலுங்கியது” என நாயகம் [ஸல்] அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன் என ஜாபிர் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள். [புகாரி,முஸ்லிம்,மிஷ்காத் : 575] 9
“ சொர்க்கம் ஒரு சொகுசான தோட்டம்.அது நல்லடியார்களைக் காண ஆசைப்படுகிறது.அவர்களின் வருகையை எதிர் நோக்கி குதூகலிக்கிறது. கஃபாவை விடவும் மேலான அல்லாஹ்வின் அர்ஷ் குலுங்கியது,அசைந்தது என்றால் வலிமார்களைக் காண கஃபா ஆசைப்படுவதோ அவர்கள் வருகையை நினைத்து ஆனந்தப்பட்டு அசைவதோ,இடம் நகர்வதோ ஏன் கூடாது?”
அது புதுமையான காரியமோ முடியாத காரியமோ அல்ல.
கஃபா என்பது ஒரு வலுவான கட்டிடம்.அது எப்படி அதன் இடத்தை விட்டு நகர முடியும்?அந்த நேரத்தில் கஃபா,அது இருந்த இடத்தில் இல்லாமல் போய் விட்டதா? இது எப்படி சாத்தியமானது என்றெல்லாம் யோசிக்கக் கூடாது. ஏனெனில்
“அல்லாஹ் சகல வஸ்துவின் மீதும் சக்தி பெற்றவன்”.
[ அல்குர்ஆன் : 2 ; 20] 10
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஜிப்ரயீல் [அலை] அவர்களை, அவர்களின் அசல் கோலத்தில் பார்த்திருக்கிறார்கள். அப்போது அவர்களுக்கு 600 இறக்கைகள் இருந்தது. அவர்களின் பாதம் தரை தட்டிக் கொண்டும் அவர்களின் தலை வானத்தைத் தொட்டுக் கொண்டும் இருந்தது. அவர்களின் இரண்டு புறங்கள், ஒன்று கிழக்கேயும் மற்றொன்று மேற்கேயும் அடைத்துக் கொண்டு மொத்தத்தில் அவர்களின் முழு உருவம் முழு வெளியையும் வியாபித்துக் கொண்டிருந்தது.என்று ஹதீஸில் வந்துள்ளது.இதே ஜிப்ரயீல் [அலை] பல சமயம் மனித ரூபத்தில் [குறிப்பாக] திஹ்யத்துல் கலபி [ரலி] அவர்களின் கோலத்தில் பல முறை வந்திருக்கிறார்கள். இப்படி அவர்கள் மனித ரூபத்தில் வந்த பொழுது,அவர்களின் பென்னம்பெரிய அந்த உருவம் [600 இறக்கைகள்] எங்கே போனது? என்ற சர்ச்சை ஹதீஸை மறுப்பதற்கு ஒப்பானது. அவ்வாறே அந்த பெரிய உருவம்,அது இருந்த இடத்தில் இல்லாமல் போய் விட்டதா? அல்லது அவை சுறுங்கி விட்டதா? என்ற விவாதம் தேவையற்றது. அதைப்போல அவர்களின் ஐயங்களும் அர்த்தமற்றது.
நாயகம் [ஸல்] அவர்கள் மிஃராஜுக்குச் சென்று வந்த போது, பைத்துல் முகத்தஸ் சென்ற செய்தியையெல்லாம் குரைஷிகள் பொய்யாக்கினார்கள்.மேலும், பெருமானாரை சோதிப்பதற்காக, அதற்கு முன்பு வரை பைத்துல் முகத்தஸுக்கே போயிராத நபியிடத்தில் அதைப்பற்றி பல கேள்விகளைக் கேட்டார்கள்.அது குறித்து, பெருமானார் [ஸல்] அவர்கள் சொல்லும் போது.....
“குரைஷிகள் என்னைப் பொய்யாக்கிய போது, நான் ஒரு பாறையின் மீதேறி நின்று கொண்டேன்.அப்போது அல்லாஹ் எனக்கு பைத்துல் முகத்தஸைத் தூக்கிக் காட்டினான்”. [புகாரி,முஸ்லிம்,மிஷ்காத் : 530] 11
இன்னொரு அறிவிப்பில்....
“பைத்துல் முகத்தஸ் – பள்ளிவாசலைக் கொண்டு வரப்பட்டு,உகைலுடைய வீட்டில் வைக்கப்பட்டது.நான் அதைப் பார்க்கிறேன்.அது பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அதைப் பார்த்து பதிலளித்துக் கொண்டிருந்தேன்” என்று நாயகம் [ஸல்] அவர்கள் சொன்னதாக வந்துள்ளது.
பைத்துல் முகத்தஸ் – ஹழ்ரத் சுலைமான் நபி [அலை] அவர்களால் ஜின்களைக் கொண்டு எழுப்பப் பட்ட பிரமாண்ட மானதொரு பள்ளிவாசலாகும்.அதுவே, ஜரூஸலத்திலிருந்து நூற்றுக் கணக்கான மைல்களுக்கு அப்பாலிருக்கும் மக்காவுக்கு இடம் பெயர்ந்து வர முடியும் என்றால், கஃபா கொஞ்ச தூரத்திற்கு ஏன் நகர்ந்து வர முடியாது? இது சாத்தியமற்றதோ,ஹதீஸுக்கு முரணானதோ அல்ல.
கஃபா என்பது வெறும் சதுரமான ஒரு கல் அல்ல.அது அல்லாஹ்வுடைய அருள் வெளிப் பாட்டின் ஒரு குறியீடு! இந்த வகையில் கஃபாவைக் கண்டால் நமது சிந்தனை ஒரு போதும் கரைபடியாது.
………………………………………………………………………………………………………
وَأَنْزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَى1
2عَنْ الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنِي حَمْزَةُ عَنْ أَبِيهِ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَيْنَا أَنَا نَائِمٌ شَرِبْتُ يَعْنِي اللَّبَنَ حَتَّى أَنْظُرَ إِلَى الرِّيِّ يَجْرِي فِي ظُفُرِي أَوْ فِي أَظْفَارِي ثُمَّ نَاوَلْتُ عُمَرَ فَقَالُوا فَمَا أَوَّلْتَهُ قَالَ الْعِلْمَ ]باب مناقب عمربن الخطاب[
3 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِنْ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ
4 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ قَالَ
رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَطُوفُ بِالْكَعْبَةِ وَيَقُولُ مَا أَطْيَبَكِ وَأَطْيَبَ رِيحَكِ مَا أَعْظَمَكِ وَأَعْظَمَ حُرْمَتَكِ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَحُرْمَةُ الْمُؤْمِنِ أَعْظَمُ عِنْدَ اللَّهِ حُرْمَةً مِنْكِ مَالِهِ وَدَمِهِ وَأَنْ نَظُنَّ بِهِ إِلَّا خَيْرًا ]باب حرمة دم المؤمن[
5 عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ قَالَ
قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ بَعْدَ وَفَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعُمَرَ انْطَلِقْ بِنَا إِلَى أُمِّ أَيْمَنَ نَزُورُهَا كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَزُورُهَا فَلَمَّا انْتَهَيْنَا إِلَيْهَا بَكَتْ فَقَالَا لَهَا مَا يُبْكِيكِ مَا عِنْدَ اللَّهِ خَيْرٌ لِرَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ مَا أَبْكِي أَنْ لَا أَكُونَ أَعْلَمُ أَنَّ مَا عِنْدَ اللَّهِ خَيْرٌ لِرَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَكِنْ أَبْكِي أَنَّ الْوَحْيَ قَدْ انْقَطَعَ مِنْ السَّمَاءِ فَهَيَّجَتْهُمَا عَلَى الْبُكَاءِ فَجَعَلَا يَبْكِيَانِ مَعَهَا ]باب من فضايل ام ايمن رض[
6 عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أُرِيتُ الْجَنَّةَ فَرَأَيْتُ امْرَأَةَ أَبِي طَلْحَةَ ثُمَّ سَمِعْتُ خَشْخَشَةً أَمَامِي فَإِذَا بِلَالٌ ]باب من فضايل ام سليم رض[
7عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَلَعَ لَهُ أُحُدٌ فَقَالَ هَذَا جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ ]باب واتخذالله ابراهيم خليلا[
8عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الْجَنَّةَ لَتَشْتَاقُ إِلَى ثَلَاثَةٍ عَلِيٍّ وَعَمَّارٍ وَسَلْمَانَ ]باب مناقب سلمان الفارسي[
9عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ
سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ اهْتَزَّ الْعَرْشُ لِمَوْتِ سَعْدِ بْنِ مُعَاذٍ ]باب مناقب سعد بن معاد[
10إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
11 حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّهُ
سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَمَّا كَذَّبَتْنِي قُرَيْشٌ قُمْتُ فِي الْحِجْرِ فَجَلَا اللَّهُ لِي بَيْتَ الْمَقْدِسِ فَطَفِقْتُ أُخْبِرُهُمْ عَنْ آيَاتِهِ وَأَنَا أَنْظُرُ إِلَيْهِ ]باب حديث الاسراء[
என்றும் தங்களன்புள்ள...
No comments:
Post a Comment