தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா (மார்க்க அறிஞர்கள்) சபை சார்பாக 25.04.2015 சனிக்கிழமை சிதம்பரம் ஈத்கா மைதானம் அருகே நடந்த மாநில மீலாது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்..
1. இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மைக்கும் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ எனும் பாரம்பரிய கோட்பாட்டிற்கும் அண்மைக் காலமாகக் கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதை இந்த மாநாடு கவலையோடு அவதானிக்கிறது. பொறுப்பிலுள்ள அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் முதலானோர் அரசியல் சாசனத்திற்கும் சமூக ஒற்றுமைக்கும் ஊறுவிளைவிக்குமாறு பேசுவதையும் அறிக்கைகள் வெளியிடுவதையும் மத்திய-மாநில அரசுகள் முற்றாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
2. வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்படுவதும் கலவரங்களைத் தூண்டும் வகையில் மேடைகளில் வெறியோடு உரையாற்றுவதும் அதையடுத்து கலவரங்களில் ஈடுபட்டு சிறுபான்மை மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் சேதம் விளைவிப்பதும் சமீப காலமாகத் தொடர்கதையாகிவிட்டன. இவற்றை மத்திய-மாநில அரசுகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கி, மத-மொழி சிறுபான்மையினரின் அச்சத்தைப் போக்கிட வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
3. இன்றையக் காலச் சூழ்நிலையில், முன்எப்போதும் இல்லாத அளவிற்குச் சமூக நல்லிணக்கத்திற்கும் சமுதாய ஒற்றுமைக்கும் பெரும் அச்சுறுத்தல் உருவாகியிருக்கிறது. அரசியல் மற்றும் சமூக அமைப்புகளும் சமயத் தலைவர்களும் இதைக் கருத்தில் கொண்டு, சமூக நல்லிணக்கத்திற்கான நடவடிக்கைகளையும் சமுதாய ஒற்றுமைக்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டுமாய் அனைவரையும் இம்மாநாடு கனிவோடு கேட்டுக்கொள்கிறது.
4. மார்க்கத்தின் வழிகாட்டிகளான உலமா பெருமக்கள் காலத்தின் கட்டாயம் கருதி, அறிவியல், தொழில்நுட்பம், பெரு நிறுவனங்கள் ஆகியவற்றால் விளைந்துள்ள கலாசார சீரழிவு, இளைஞர்கள் மற்றும் பெண்களின் மிகையான நாகரிகமோகம், குடும்பப் பாரம்பரியத்தின் சரிவு, தனிமனித ஒழுக்கக்கேடு ஆகியவற்றைத் திறனோடும் நுட்பத்தோடும் சீராக்க முன்வர வேண்டும் என்று இம்மாநாடு உரிமையோடு கேட்டுக்கொள்கிறது.
5. சமுதாயத்தின் இம்மை-மறுமை வெற்றி ஷரீஅத் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து வாழ்வதில்தான் உள்ளது. எனவே, சமுதாயப் பெருமக்கள் ஷரீஅத் சட்டங்களைத் தங்கள் சொந்த வாழ்க்கையில் பின்பற்றுவதோடு, ஷரீஅத் சட்டங்களில் யாரும் கைவைத்துவிடாமல் கண் இமைபோல் பாதுகாத்திட ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும் என இம்மாநாடு அக்கறையோடு கேட்டுக்கொள்கிறது.
6.இன்று தமிழகத்தில் சிலர் ஆண்டாண்டு காலமாக முஸ்லிம்களின் அடையாளச்சி ன்னங்களாக இருந்து வரும் வரலாற்று அடையாளங்களை அழிக்க வேண்டும் என்று பேசிவருவதை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது .அல்லாஹ்வின் திருப்பொருத்திற்கும் அல்லாஹ்வின் தூதர் நபி சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் பாராட்டிற்கும் இலக்கான நபித்தோழர்கள் , இஸ்லாத்திற்காக தங்கள் வாழ்க்கை முழுவதையும் அர்பணித்த இமாம்கள் ,சான்றோர்கள் ஆகியவர்களை வசைபாடுவதை யும் அவமானப்படுத் துவதை யும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இம்மாநாடுவலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது
7..சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் விதமாகவும்,நல்லிணக்க எழுச்சி ஏற்படும் விதமாகவும் சமூக நல்லிணக்க மாநாடுகளை தமிழாகத்தின் எல்லா பகுதிகளிலும் நடத்த வேண்டுமாய் இஸ்லாமிய நன் மக்களையும் , மாவட்ட, வட்டார ஜமாஅத்துல் உலமா சபை யினரையும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது
8 சொர்கத்தின் நறுமணமாகவும்,அல்லாஹ்வின் அருட்கொடையாகவும் கிடைக்கப்பெற்ற நமது ஆண் ,பெண் குழந்தைகளின் மார்க்க உணர்வுகள் இன்றைய நாகரீக காலத்தில் தேய்ந்து வருவதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு மஹல்லாதோறும் மக்தப் மதரசாக்களை திறன்பட நடத்திட வேண்டும் எனவும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
மக்தப் மதரசாக்கள் செயல் படாத மஹல்லாகளில் மக்தப் மதரசாக்களை துவங்கிட விழிப்புணர்வு ஏற்படுதிட வேண்டு மெனவும் உம்மத்தையும் ஆலிம்களையும்இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
No comments:
Post a Comment